Sunday 4 December 2011

பாரத ரத்னா....:- டாக்டர் பாபு ராஜேந்திர பிரசாத்.


இந்திய சுதந்திரப் போராட்டத்தின் ஒருபகுதியாக சம்பரன் சத்யாகிரகம் என்ற நிகழ்வு பீகாரில் தீவிரம் அடைந்தது. விவசாய சாகுபடிக்கு விதிக்கப்பட்ட  ஆங்கிலேய அரசின் கட்டுப்பாடுகளுக்கு எதிராக உழவர்கள் போர்க்கொடி தூக்கினர். அவர்களுக்கு ஆதரவாக மகாத்மா  காந்தி  சம்பரன் சத்தியாகிரகத்தில் ஈடுபட்டார். அப்போது அங்குள்ள நிலையை கண்டறிந்து வருமாறு பாபுஜியை, தேசப்பிதா மகாத்மா காந்தி அனுப்பினார். 

உண்மை அறியும் குழுவை வழிநடத்திய பாபுஜி அவர்கள், அரசுக்கு முக்கியமான பரிந்துரைகளை செய்தார். பின்னாளில் அவை சம்பரன் விவசாய சட்டத்தில் (1918) இடம் பெற்றதன் மூலமாக, தேசப்பிதா மகாத்மா காந்தியின் அஹிம்சைப் போராட்டம் பாரதத்தில் முதல் வெற்றியைப் பெற்றது. இதுவே பாபுஜி அவர்களின் வாழ்வில் திருப்பு முனையாக அமைந்தது. அவர் இந்திய விடுதலைப் போராட்டக் களத்தில்  முன்னணித் தலைவரானார். 

பாரதக் குடியரசு அமைந்ததில் பெறும் பங்கு வகித்தவர் பாபு ராஜேந்திர பிரசாத். நாட்டின் முதல் குடியரசுத் தலைவராக வீற்றிருந்து அவர் ஆற்றிய பணிகளுக்காக, குடியரசு என்ற முறையில் இந்தியா அவருக்கு என்றும் நன்றி செலுத்தும்.

பீகார் மாநிலத்தில், ஷிவான் மாவட்டத்தில், ஜிரதே கிராமத்தில்,1884,டிசம்பர் மாதம் 3 ம் தேதி பிறந்தவர் திரு ராஜேந்திர பிரசாத். இவரது தந்தை மகாதேவ  சஹாய், பெர்சிய மொழியிலும் சமஸ்கிருதத்திலும் நிபுணர். தாய் கமலேஸ்வரி தேவி.

தனது துவக்கக் கல்வியை சாப்ரா மாவட்ட பள்ளியில்  பயின்ற  ராஜேந்திர  பிரசாத் அவர்கள்,பாட்னாவிலுள்ள டி.கே. கோஷ் அகாடமியில் உயர்நிலைக் கல்வி பயின்றார். இதனிடையே அவருக்கு 12 வயதிலேயே, ராஜவன்ஷி தேவி என்பவருடன் திருமணம் நடக்கிறது. 

கல்கத்தா பல்கலைக்கழக நுழைவுத் தேர்வில் முதலிடத்தில் தேறிய  திரு ராஜேந்திர பிரசாத், 1902 ல் பிரெசிடென்சி கல்லூரியில் சேர்ந்து பிரபல விஞ்ஞானிகள் திரு ஜெகதீஷ் சந்திர போஸ், திரு பிரபுல்ல சந்திர ராய்  ஆகியோரின் மாணாக்கராக பொருளாதாரத்தில் முதுகலை பட்டத்தில் தேர்ச்சி பெற்றார்.

1908 ல் முசாபர்பூரில் பூமிகர் கல்லூரியில் பேராசிரியராகச் சேர்ந்து சிறப்பான பணிகளினின் மூலம் கல்லூரியின் முதல்வராகவும் அவர் உயர்ந்தார். பின்னாளில் சட்டக் கல்வி பயில்வதற்காக பணியிலிருந்து விலகி 1915 ல் சட்டக் கல்வியில் முதுகலை (எம்.எல்) பட்டம் பெற்றார். பீகார் மற்றும் ஒரிசா உயர்நீதிமன்ற வழக்கறிஞராக அவர் திறம்பட பணிபுரிந்து குறுகிய காலத்தில் பெரும் வழக்கறிஞராக‌ முத்திரை பதித்தார்.

அதேசமயம் விடுதலை வீரரும், புரட்சியாளருமான ஞானி ராகுல்   சாங்கிருத்தியாயனுடன் ஏற்பட்ட நட்பின் மூலம் இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்று பல சிறப்பான பணிகளின் மூலம் 1934 ல் மும்பையில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். காங்கிரஸ் தொண்டர்கள் திரு ராஜேந்திர பிரசாத் அவர்களை'பாபுஜி'என்று அன்புடன் அழைத்து மகிழ்ந்தனர்.

1947 ல் பாரதம் விடுதலை பெற்றது. அதற்கு முன்னர் நடந்த பிரிவினைவாத நிகழ்வுகளில்.."நிலவியல் ரீதியாகவும், பூகோள ரீதியாகவும், வரலாற்று ரீதியாகவும்,சமூகம்,பொருளாதாரம்" என்று எந்த அடிப்படையிலும் பாகிஸ்தான் என்ற தேசம் பிரிவது சாத்தியமற்றது என்று வீரத்துடன் பேசியவர் பின்னர் அவை சாத்தியமில்லை என அறிந்து கண்ணியத்துடன் ஒதுங்கி நின்றார்.! அதன் பிறகு, இந்தியாவுக்கான தனித்த அரசியல் சாசனத்தை வகுக்கும் பணி  குழுவுக்கு பாபு ராஜேந்திர பிரசாத் தலைமை ஏற்று ஹிந்து சிவில் சட்டம் தொடர்பான குழப்பங்கள் ஏற்பட்டபோது, நடுநிலைமையுடனும் தேசநலம் குறித்த சிந்தையுடனும் பாபுஜி பல அரிய முயற்சிகளை மேற்கொண்டு சிக்கல்களை மிகவும் திறமையாக தீர்த்துவைத்தார். 

1950, ஜனவரி. 26 ல் இந்தியா குடியரசு நாடானபோது நாட்டின் முதல் குடியரசுத் தலைவர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப் பட்டார் பாபு ராஜேந்திர பிரசாத் அவர்கள். 1962, மே 13 வரை நாட்டின் முதல் குடிமகன் என்ற பதவியை வகித்த அவர், வயது காரணமாக தானாகவே ஓய்வு பெற்றார். அவரது பதவிக் காலத்தில் குடியரசுத் தலைவர்  என்ற அரசியல்சாசனப் பதவிகேற்ற பல முன்னுதாரணங்களை அவர் ஏற்படுத்தினார். 1962 ல் அவருக்கு "பாரத ரத்னா"  விருது வழங்கப்பட்டது. 1963, பிப்ரவரி 28 ல் பாபு ராஜேந்திர பிரசாத் மறைந்தார்.

பாபு ராஜேந்திர பிரசாத் குடியரசுத் தலைவராக இருந்த காலத்தில் பிரதமர் நேருவின் பல தவறான முடிவுகளை மாற்றியமைத்தது மட்டுமன்றி பிரதமர் நேருவின் மக்கள் செல்வாக்கு நாட்டிற்கு பல சிக்கல்களை விளைவிக்காமல்  கட்டுப்படுத்தியதில் பாபுஜி அவர்களுக்கு இன்றியமையாத பங்கு உண்டு என்பதையும்...இந்தியக் குடியரசை நாகரிகத்துடனும், உறுதியாகவும் வழிநடத்தியவர் என்றும் பாபு ராஜேந்திர பிரசாத் போற்றப்படுகிறார். இன்று அவரது 127ம் பிறந்தநாள். அந்த மாபெரும் தலைவர் பற்றிய ஒரு நினைவு கூறல். 

No comments:

Post a Comment