Sunday 4 December 2011

சர் சி.வி.ராமன்

                                                                                        சர் சி.வி.ராமனின் கண்டுபிடிப்புகளில் மிக முக்கியமானது "ராமன் விளைவு" (Raman Effect)என்பதை நாம் அறிவோம்.! 1921 - ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற கல்லூரிகளுக்கான மாநாட்டில் கலந்துக்கொண்டு இந்தியா திரும்பிக் கொண்டிருந்தபோது...கப்பலின் மேல்தளத்தில் நின்று இயற்கை காட்சிகளை ரசித்துக் கொண்டிருந்த ராமனின் மனதில் கடலுக்கு நீலநிறம் எப்படி ஏற்பட்டது என்ற சிந்தனை தோன்றியது.! கல்கத்தா திரும்பியதும் தனது ஆய்வு கூடத்தில் தீவிர ஆராய்ச்சியில் ஈடுபட்ட அவர்...மிகக் குறைந்த நாட்களில், மிக குறைவான பொருட்செலவில், "சூரிய ஒளிக்கதிர்கள் திரவப் பொருட்களில் ஊடுருவும்போது அப்பொருட்களில் உள்ள கூட்டணுக்களால் ஒளிச்சிதறல் ஏற்பட்டு வெவ்வேறு அலை நீளங்களை உடைய புதிய நிறக்கதிர்கள் தோன்றுகின்றன". "ஒளி...ஊடுருவும் பொருட்களின் தன்மைக்கேற்ப உண்டாகும்  வேறுபாடுகளின் விளைவே கடல் நீல நிறமாக தோன்றுவதற்குக் காரணம் என்பதையும்..இந்த நிகழ்ச்சி திட, திரவ‌, வாயு பொருட்கள் எல்லாவற்றிலும் ஏற்படுகின்றன எனவும் கண்டறிந்தார்". இவர் கண்டறிந்த விளைவு.. "ராமன் விளைவு" (Raman Effect) என்றும், இந்த விளைவில் தோன்றும் கோடுகளை.. "இராமன் கோடுகள்" (Raman Spectrum..இது வேற ஸ்பெக்ட்ரம்)என்றும் பெயரிடப் பட்டன".! தொடர்ந்து ஆராய்ச்சிகள் செய்து பல அரிய கண்டுபிடிப்புகளை உலகிற்கு வெளியிட்டார்.!

1. ராமனின் இயல்பியல் கண்டுபிடிப்புகள் விஞ்ஞான உலகில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவையாக புகழ் பெற்றன‌. அவரது தீர்க்கமான விஞ்ஞான ஆற்றல்.. மூலக்கூறுகளின் உள்ளமைப்பை [Molecular Structure] ஆராய்ச்சி செய்யப் பயன்படும் முறைகளிலும்...ஒளித்திரள் [Photons] வடிவத்தில்...ஒளியானது..துகள்களைப் [Particles] போல் நடந்து கொள்கின்றன என்றும் அழுத்தமாக எடுத்துக் காட்டி, குவாண்டம் கேட்பாட்டை [Quantum Theory] மெய்ப்பிக்கின்றன என்றும் விஞ்ஞான உலகம் அறிந்து கொண்டது.! 

2. இத்தகைய கண்டுபிடிப்புகளுக்காக அப்போதைய ஆங்கிலேய அரசு அவருக்கு 1929 ஆம் ஆண்டு சர். பட்டம் வழங்கி கௌரவித்தது. மேலும், உலகின் மதிப்புமிக்க விருதான... இயற்பியலுக்கான நோபல் பரிசு 1930 ல் இவருக்கு வழங்கப்பட்டது. 

3. சந்திரசேகர வெங்கட ராமன் 1888 ஆம் ஆண்டு நவம்பர் 7 ஆம் தேதி தமிழ் நாட்டில் திருச்சிராப்பள்ளி நகரில் பிறந்தார். தந்தையார் விசாகப் பட்டணத்தில் கணித, பெளதிகப் பேராசிரியராய் A.V.N. கல்லூரியில் பணியாற்றி வந்தார். ராமன் முதலில் A.V.N. கல்லூரியில் பயின்றார். அப்போது ராமன் கணிதம், பெளதிக முற்போக்குக் கோட்பாடுகளை [Advanced Concepts of Maths & Physics] எளிதில் புரிந்து ஆழ்ந்து கற்றுக் கொண்டார். பின்னர் (அப்போதைய மதராச பட்டணம்) சென்னை பிரசிடென்ஸிக் கல்லூரில் படித்து, புகுமுக பாடங்களில்.. முதல் வகுப்பில் சிறப்பு தேர்ச்சியும் [First Class with Distinctioந்] ,16ம் அகவையில் மெட்ராஸ் பல்கலைக் கழகத்தில் 1904 இல் B.A. பட்டமும் , 1907 இல் M.A. பட்டமும் (இயல்பியலில் தங்கப்பதக்கமும்) பெற்றார். படித்துக் கொண்டிருந்த போதே அவரது ஈடுபாடு ஒளி, ஒலி ஆராய்ச்சிகளில் [Optics, Acoustics] ஆழ்ந்திருந்தது. விஞ்ஞானக் கல்வியை வெளிநாட்டுக்குச் சென்று தொடர விருப்பம் இல்லாத‌ நிலையில்..1907 ஆம் ஆண்டில் ஆங்கிலேய அரசின் நிதித்துறை நிறுவனத்தில் [Financial Division of the Civil Service] கணக்காளராக [Accountant] கல்கத்தாவில் பணியாற்றினார். அவ்வமயம் ஓய்வு நேரங்களில் தனது அறிவியல் ஆர்வத்தின் காரணமாக..கல்கத்தாவில் இருந்த இந்திய விஞ்ஞான வளர்ச்சிக் கூட்டகத்தில் [Indian Association for the Cultivation of Science] தன் விஞ்ஞானப் படிப்புகளைத் தனியாகத் தொடர்ந்து குறுகிய காலத்திலே அவர் ஓர் சிறந்த சோதனை நிபுணர் என்று பெயர் பெற்றார்.

4. முதலில் ஒலியின் அதிர்வுகள் பற்றியும் [Vibrations in Souந்ட்],பின்னர் இசைக் கருவிகளின் விஞ்ஞான ஈடுபாடுகள் (Theory of Instrumenta Science) பற்றியும் செய்த ஆய்வுகள் அவரது வாழ்நாள் முழுதும் தொடர்ந்தது என்றால் அது மிகையாகாது. அவரது நுண்ணிய விஞ்ஞான ஆராய்ச்சிகளைப் பற்றி அறிந்த, கல்கத்தா பல்கலைக் கழகம் 1917 இல் பெளதிகப் பேராசிரியர் வேலையை அவருக்கு வழங்க.. ராமனும் அதை விருப்பமுடன் ஏற்றுக் கொண்டு, ஏறக்குறைய 16 ஆண்டுகள் கல்கத்தா பல்கலைக் கழகத்தில் பெளதிகப் பேராசிரியராகப் பணியாற்றினார்.

5. கல்கத்தா பல்கலைக் கழகத்தில் பணியாற்றிய அந்தப் பதினாறு ஆண்டுகளை ராமனின் பொற்காலம் என்று சொல்லலாம். அப்போதுதான் அவரது அரிய, புதிய, அநேக விஞ்ஞானப் படைப்புகள் தோன்றி உலகத்திற்கு அறிமுகமாயின. 1926 இல் ராமன் இந்தியப் பெளதிக வெளியீடு [Indian Journal of Physics] பதிவைத் துவங்கித் தனது விஞ்ஞானப் படைப்புகள் வெளியாக ஏற்பாடு செய்தார். 1928 இல் இந்திய விஞ்ஞானப் பேரவையின் [Indian Science Congress] தலைவராக ராமன் தேர்ந்தெடுக்கப் பட்டு முதலில் இந்திய அறிவியல் புலத்திற்கு அறிமுகமானார். 

6. பிரிட்டிஷ் அரசாங்கம் ராமனது விஞ்ஞானப் படைப்புகளைப் பாராட்டி,1929ல் சர்[Sir] பட்டத்தையும் பின்னர்..பிரிட்டன் பேரரசுக் குழுமத்தின்.. ஹூஸ் பதக்கத்தையும் [Hughes Medal of the Royal Society] ராமனுக்குக் கொடுத்தது. 1930 ஆம் ஆண்டு நோபெல் பரிசையும் ராமன் பெளதிகத்திற்குப் பெற்று, உலகப் புகழடைந்தார்.

7.நோபெல் பரிசு பெற்றபின் 1934 இல் பெங்களூர் இந்திய விஞ்ஞானக் கழகத்தில் [Indian Institute of Science] பெளதிகத் துறைப் பிரிவில் தலைவர் [Head of the Physics Dept] பதவியை ஏற்றுக் கொள்ள, ராமன் கல்கத்தாவிலிருந்து பெங்களூருக்குச் சென்றார். பிரிட்டிஷ் இந்தியாவில் அந்தக் காலத்தில் [1909] செல்வாக்குடைய டாடா தொழிற்துறை குழுமங்கள் [Tata Industrial Empire] கட்டிய ஆசியாவிலே உயர்ந்த ஓர் விஞ்ஞான ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் கூடமான அது இன்றளவும் சிறந்து விளங்கி வருவதை நாம் அறிவோம்! 

8. பெங்களூரில் 1948 வரை அப்பதவியில் இருந்து கொண்டே, இடையில் நான்கு ஆண்டுகள் இந்தியாவின் விஞ்ஞானக் கழகத்தின் தலைவராகவும் [President] பொறுப்பேற்றார். கல்வி புகட்டும் கடமையில் அவர் ஆழ்ந்து கண்ணும் கருத்தோடும் வேலை செய்தார். அவரிடம் விஞ்ஞானக் கல்வி கற்று மேன்மை யுற்றுப் பிற்காலத்தில் பெரும் பொறுப்பான பணியாற்றியவர்கள் பலர்.. என்பது குறிப்பிடத் தக்கது. 1939 ல் அகிலக்கதிர் [Cosmic Rays] ஆய்வுத் துறைப் பகுதியில் ஆராய்ச்சி செய்ய பெங்களூர் வந்த விஞ்ஞானி டாக்டர் ஹோமி ஜெ. பாபா [Dr. H.J. Bhaba]...பதினைந்து ஆண்டுகளுக்குப் பிறகு ஆசியாவிலே மிகவும் முற்போக்கான அணுவியல் ஆராய்ச்சி உலைகளையும், அணுசக்தி நிலையங்களையும் பாரதத்தில் தோற்றுவித்தவர் என்பதும்... அரிய விஞ்ஞான‌ மேதை டாக்டர் பாபா மற்றும் ராமன் ஆகிய இரு மேதைகளும் ஒருவர் மீது ஒருவர் மதிப்பும், நட்பும் கொண்டிருந்தார்கள் என்பதும் கூடுதல் தகவல்கள்.!

9. சுதந்திர இந்திய அரசு...  1948ல்... ராமன் அவர்களது அறிவியல் ஆர்வத்திற்காகவும்...சாதனைகளுக்காகவும்..உலக அரங்கில் இந்தியாவின் புகழை அறிவியல் உலகில் மேம்படச் செய்த அவருக்காகப் பெங்களூரிலே ஓர் புதிய ஆராய்ச்சிக் கூடத்தைக் [Raman Research Institute] கட்டி அவர் தனியாக ஆராய்ச்சிகள் புரிய வசதி செய்தது. அதன் ஆணையாளராக [Director] சர் சி.வி. ராமன் நியமிக்கப் பட்டார். பின்னர் 1954ம் ஆண்டு அறிவியலில் அவரது பங்களிப்பிற்காக இந்தியாவின் மிக உயர்ந்த சிவிலியன் விருதான "பாரத ரத்னா" விருதினை வழங்கி அரசு அவரை கெளரவித்தது.

10. விஞ்ஞான மேதை சர் சி.வி. ராமன் பெங்களூரில் 1970 ஆம் ஆண்டு நவம்பர் 21 ஆம் தேதி காலமானார். இந்தியாவில் முன்னோடியாக விஞ்ஞான வளர்ச்சிக்கு விதையிட்டு, அதை விருத்தி செய்ய அநேக இளைஞர்களை அறிவியல் மேதைகளாக உருவாக்கிய சர் சி.வி. ராமனை, "இந்திய விஞ்ஞானத்தின் தந்தை" என்று உலகம் போற்றிப் புகழ்வதில்..இருவேறு கருத்துக்கள் இருக்க முடியாது..

No comments:

Post a Comment