Wednesday 14 December 2011

நகைச்சுவை மேதை கலைவாணர்..


                                                                                                                                                                                                                     ஒருநாள் காலையில் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன், தன்னுடைய வீட்டில் அமர்ந்து, பழைய சோறு சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது வீட்டுக்கு வந்த அவரது நண்பரும்... முன்னாள் அமைச்சருமான என்.வி.நடராசன், ``என்னங்க... மதுரம் உங்களுக்கு டிபன் எதுவும் செய்து தரலையா..? பழைய சோறு சாப்பிடுறீங்க..!''

கலைவாணர் எதுவும் பேசாமால், வேலைக்காரரைக் கூப்பிட்டு, ``...இந்தா... இந்த ஒரு ரூபாய்க்கு... பழைய சோறு வாங்கிட்டு வா...'' என்றார். ரொம்ப நேரம் கழித்து வந்த வேலைக்காரர், ``ஐயா... நானும் எங்கெங்கோ அலைஞ்சிட்டேன். ஒரு இடத்திலேயும் பழைய சோறு கிடைக்கல..'' என்றார்.

``கேட்டீங்களா நடராசன்... எவ்வளவு பணம் கொடுத்தாலும் கிடைக்காத அற்புதப் பொருள்... அதனால்தான் இதை சாப்பிட்டேன்!'' என்று கலைவாணர் சொன்னதைக் கேட்டு திரு நடராசன் மட்டுமின்றி...அவரது மனைவி டி.ஏ. மதுரமும் அசந்துவிட்டார்.!

50 ஆண்டுகள் கூட வாழ்ந்திராத கலைவாணர், காலத்தைக் கடந்து நிற்கும் புகழுக்குச் சொந்தக்காரர். “சிந்திக்கத் தெரிந்த மனித குலத்திற்குச் சொந்தமான கையிருப்பு சிரிப்பு” என்று கூறிச் சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்தார்.

நடிகராக இருந்த ஒருவருக்குச் சிலை வைத்து மரியாதை செய்த சிறப்பு தமிழ் நாட்டில் கலைவாணருக்கே முதலில் கிடைத்தது என்றால் அது மிகையாகாது. நாட்டுக்குச் சேவை செய்யும் நாகரீகக் கோமாளி என்று தன்னை எளிமையாக அடையாளப்படுத்திக் கொண்டவர். எதிரியாக யாரையும் உருவாக்கிக் கொள்ளாமல் வாழ்ந்து முடிந்த அபூர்வ மனிதர்.!

நாஞ்சில் நாட்டில் நாகர்கோவிலை அடுத்துள்ள சிற்றூர் ஒழுகினச் சேரியில் 1908ம் ஆண்டு நவம்பர் 29ம் தேதி பிறந்தவர்.வறுமை காரணமாக நான்காம் வகுப்புடன் படிப்பு தடைபடுகிறது.கலைவாணர் என்.எஸ்.கே.-யின் ஆரம்ப நாட்கள் கடுமையானவை. காலையில் டென்னிஸ் கோர்ட்டில் பந்து எடுத்துப் போடும் வேலை. பிறகு மளிகைக் கடைக்கு பொட்டலம் மடிக்க‌ச் செல்வார். மாலையில் நாடகக் கொட்டாயில் தின்பண்டங்கள் விற்பார். நாடகம் அவரை மிகவும் ஈர்த்தது. மகனின் விருப்பம் அறிந்த தந்தை ஒழுகினசே‌ரியில் நாடகம் போட வந்த ஒ‌ரி‌ஜினல் பாய்ஸ் கம்பெனியில் அவரை சேர்த்துவிடுகிறார். அங்கிருந்து கலைவாணரின் நாடக வாழ்க்கை ஆரம்பமாகிறது.பாய்ஸ் நாடக கம்பெனியிலிருந்து டி.கே.எஸ். சகோதரர்களின் ஸ்ரீ பால சண்முகானந்தா நாடக சபையில் சேர்கிறார் திரு என்.எஸ்.கிருஷ்ணன் அவர்கள். அங்கிருந்து பால மீனரஞ்சனி சங்கீத சபை. பல நாடக கம்பெனிகள் மாறினாலும் அவருக்கு டி.கே.எஸ். சகோதரர்களின் நாடக சபையே மனதுக்கு நெருக்கமாக இருந்து வந்துள்ளது. 

கிந்தனார் நாடகத்தில் பாகவதர் வேடத்தில் கலைவாணர் செய்யும் காலட்சேபம் பிரசித்திப் பெற்றது. அன்பே கடவுள் என்ற முகவுரையுடனே காலட்சேபம் தொடங்கும். இதில் கலைவாணர் எழுதிய ரயில் பாடல் குறித்து திராவிட நாடு பத்தி‌ரிகையில் கட்டுரை ஒன்று எழுதினா‌ர் பேரறிஞர் அண்ணர. சாதி, மத ஏற்றத்தாழ்வை அந்த ரயில் பாடல் மாற்றுவதாக குறிப்பிட்டிருந்தார் கலைவாணர்.

கரகரவென சக்கரம் சுழல

கரும்புகையோடு வருகிற ரயிலே

கனதனவான்களை ஏற்றிடும் ரயிலே

ரயிலே ரயிலே ரயிலே ரயிலே ரயிலே ரயிலே 

மறையவரோடு பள்ளுப் பறையரை ஏற்றி 

மதபேதத்தை ஓழித்திட்ட ரயிலே..!

நாடகத்தில் கலைவாணர் செய்த சாதனைகள் பல. திரைத்துறையில் காலடி வைத்த பிறகும் அவரது நாடகம் மீதான தாகம் குறையவில்லை. பிறருக்கு உதவுவதற்காகவே அவர் பலமுறை நாடகம் போட்டிருக்கிறார். நாடக கம்பெனி ஏதேனும் நொடித்துப் போனால் கலைவாணருக்கு சேதி வரும். அவர் சென்று ஒரு நாள் நடித்துவிட்டு வருவார். அந்த நாடகம் கலைவாணர் நடித்தார் எனபதற்காகவே மக்களிடம் வரவேற்பை பெறும்.

1. கலைவாண‌ரின் திரை வாழ்க்கையை தொடங்கி வைத்த படம் எல்லீஸ் ஆர்.டங்கன் இயக்கிய சதிலீலாவதி. எஸ்.எஸ்.வாசன் எழுதி ஆனந்த விகடனில் தொடராக வெளிவந்த நாவலை தழுவி இப்படம் எடுக்கப்பட்டது. இந்தப் படம் கலைவாணருக்கு மட்டுமில்லாது பல திரையுலக ஜாம்பவான்களுக்கு அறிமுகப் படமாக அமைந்தது என்றால் அது மிகையாகாது. மக்கள் திலகம் எம்.‌ஜி.ஆர்., எம்.‌ஜி.சக்கரபாணி, டி.எஸ்.பாலையா, எம்.கே.ராதா, எம்.வி.மணி, கே.வி.தங்கவேலு ஆகியோர் இந்தப் படத்தின் மூலமாக திரையுலகுக்கு அறிமுகமானார்கள்.தனது முதல் படத்திலேயே தனக்கான காட்சிகளை கலைவாணரே எழுதிக் கொண்டார்.முதன் முதலாக‌ தமிழ் திரையில் நகைச்சுவைக்கென தனி ட்ராக் எழுதியவரும் கலைவாணர் தான். கலைவாணரின் முதல் படம் சதிலீலாவதி என்றாலும் திரைக்கு முதலில் வந்த படம் மேனகா.

2. வசந்தசேனா' படப்பிடிப்புக்காக கலைவாணர் அடங்கிய குழு ரயிலில் புனே சென்றது. அப்போது படத்தின் தயாரிப்பாளர் ரயிலைத் தவறிவிடவே. வழிச்செலவுக்கு பின்னாளில் தனது மனைவியான‌ டி.ஏ.மதுரம் அவர்களின் நகைகளை விற்றே குழுவினரின் பசி போக்கினார் கலைவாண‌ர் என்.எஸ்.கே. அந்தச் சமயம்தான் இருவருக்கும் காதல் பூத்தது!

3. கலைவானர் என்.எஸ்.கே-யின் கிந்தனார் கதா காலட்சேபம் பிரபலம். நந்தனாரை,கிந்தனார் ஆக்கியதற்கு திருமதி மதுரம் கோபிக்கவே, 'பாரதியார் சாப்பிட வராமல் நந்தனாரை எழுதிக்கொண்டு இருந்தபோது, 'நந்தனாரும் வேண்டாம் கிந்தனாரும் வேண்டாம். சாப்பிட வாங்க!' என்று சலித்துக்கொண்டாராம் அவர் மனைவி செல்லம்மா. அதில் இருந்து உருவியதுதான் இந்த கிந்தனார்!' என்று திருமதி டி.ஏ.மதுரத்தைச் சமாளித்திருக்கிறார்.

4. என்.எஸ்.கே-மதுரம் தம்பதிக்கு ஒரு பெண் குழந்தை (கலைச்செல்வி) பிறந்து நான்கே மாதங்களில் இறந்துவிட்டது. அதன் பிறகு, அவர்களுக்குக் குழந்தை இல்லை. அதனால், மதுரம் தன் தங்கை டி.ஏ.வேம்பு அம்மாளை கலைவாணருக்கு மூன்றாவது தாரமாகத் திருமணம் செய்துவைத்தார். அவர்களுக்கு ஏழு பிள்ளைகள் பிறந்தனர்!

5.'மணமகள்' படத்தில் பத்மினியை அறிமுகப்படுத்தி அவர் 'நாட்டியப் பேரொளி' பட்டம் பெறக் காரணமாக இருந்தார். அந்தப் படத்தில் திரு பாலையாவின் நடிப்பை பாராட்டி, தனது விலை உயர்ந்த காரை அவருக்குப் பரிசளித்தார் கலைவாண‌ர்!

6. உடுமலை நாராயணகவியைத் தமிழ் திரை உலகிற்கு அறிமுகப்படுத்தியவர். 'உடுமலைக்கவியை' கலைவாணர் வாத்தியாரே என்று தான் அழைப்பார்.

7. 1957 – ம் ஆண்டு தமிழக சட்டசபைத் தேர்தல் காஞ்சிபுரத்தில் அறிஞர் அண்ணாவை எதிர்த்து நின்றவர் ஒரு டாக்டர். அண்ணாவுக்குப் பிரசாரத்துக்கு வந்த கலைவாணர், ஆரம்பத்தில் இருந்து கடைசி வரை அந்த டாக்டரை புகழ்ந்து பேசினார். 'இவ்வளவு நல்ல டாக்டரை நீங்கள் சட்டசபைக்கு  அனுப்பினால் உங்களுக்கு இங்கு வைத்தியம் பார்ப்பது யார்.! இவரை உங்கள் ஊரிலேயே வைத்துக்கொள்ள வேண்டும். அதனால், டாக்டருக்கு யாரும் ஓட்டுப் போடாதீர்கள். அண்ணாவையே தேர்ந்தெடுங்கள்' என்றார். அறிஞர் அண்ணா உட்பட அனைவரும் கைதட்டி ரசித்தனர்!

8. இந்து நேசன் பத்திரிகையாளர் லட்சுமி காந்தன் கொலை வழக்கில் நிரபராதி என்று தீர்ப்பு அளிக்கப் பட்டு சிறையில் இருந்து விடுதலையான என்.எஸ்.கே-வுக்கு நடந்த பாராட்டு விழாவில் தான் அவருக்கு 'கலைவாணர்' என்ற பட்டத்தை பம்மல் கே. சம்பந்தம் முதலியார் சூட்டினார்!

9. அவ்வமயம் தியாகராஜ பாகவதர் நடித்த 'ராஜமுக்தி' படத்தில் என்.எஸ்.கே. தம்பதியரின் நகைச்சுவை இல்லை. 'என்.எஸ்.கே-பாகவதர் ஜோடி பிரிந்துவிட்டதாக' பரபரப்பாக எழுதினார்கள். அப்போது நடைபெற்ற டி.ஏ.மதுரத்தின் தம்பி திருமணத்துக்கு வந்த பாகவதர், 'எங்களை யாரும் பிரிக்க முடியாது. எம்.என்றால் மதுரம், கே.என்றால் கிருஷ்ணன், டி.என்றால் தியாகராஜ பாகவதர். இதுதான் எம்.கே.டி.!' என்று சொல்லி உணர்ச்சிவசப்பட்டார்!

10. ''என்னைச் சிலர் தமிழ்நாட்டு சார்லி சாப்ளின் என்று சொல்கிறார்கள். சார்லி சாப்ளினை ஆயிரம் துண்டுகள் ஆக்கினால் கிடைக்கும் ஒரு துண்டுக்குக்கூட நான் ஈடாக மாட்டேன்!'' என்பார் என்.எஸ்.கே. தன்டைக்கமாக!

11. கலைவாணர் தீராத வயிற்று வலியால் மருந்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். வெளியூரில் இருந்ததால் அவரால் உடனே வந்து பார்க்க முடியவில்லை. என்.எஸ்.கே-வே எம்.ஜி.ஆருக்கு இப்படித் தகவல் அனுப்பினார்..'நீ என்னைக் காணவராவிட்டால், பத்திரிகைகள் உன்னைப்பற்றித் தவறாக எழுதும். நீ எனக்கு செய்த உதவியை நான் அறிவேன்...என்று..தகவல் கிடைத்தவுடன் மக்கள் திலகம் வந்து கலைவாண‌ரின் பெருந்தன்மையை உணர்ச்சிப் பெருக்குடன் நினைவு கூர்ந்தார்.!

12. ஒரு கட்டத்தில் கொடுத்துக் கொடுத்தே இல்லாமல் ஆகிப்போனார். அப்போது அவரிடம் வேலை செய்த ஒருவர், 'எனக்குத் திருமணம்' என்று வந்து நிற்கிறார். சுற்றும்முற்றும் பார்த்தபோது கண்ணில்பட்டது. ஒரு வெள்ளி கூஜா. அதை எடுத்துக் கொடுத்து, 'இதை விற்றுத் திருமணச் செலவுக்கு வைத்துக்கொள்' என்றார்!

13. 'தம்பி எவரேனும் என்னிடம் உதவி கேட்டு, நான் இல்லை என்றும் கூறும் நிலை வந்தால், நான் இல்லாமல் இருக்க வேண்டும்!' என்று அடிக்கடி கூறுவார். யார் எவர் என்று கணக்குப் பார்க்காமல் வாரி வழங்கிய வள்ளல்!தினமும் ஒரு பிச்சைக்காரன் கலைவாணர் வீட்டு வாசலில் வந்து நிற்பாராம். இவரும் பணம் கொடுப்பார். 'அவன் உங்களை ஏமாற்றுக்கிறான்' என்று வீட்டில் உள்ளவர்கள் சொன்னபோது, 'அவன் ஏமாத்தி என்ன மாடி வீடா கட்டப்போறான். வயித்துக்குத்தானே சாப்பிடப்போறான். ஏமாத்திட்டுப் போகட்டுமே' என்பாராம்!

14. கலைவாணர், காந்தியடிகளின் பெரும் பக்தர். நாகர்கோவிலில் மகாத்மா காந்திக்குத் தன் சொந்தப் பணத்தில் தூண் எழுப்பினார்.

15. சென்னையில் 'சந்திரோதயம்' நாடகம் பெரியார் தலைமையில் நடந்தது. 'நாடகம். சினிமாவால்தான் மக்கள் பாழாகிறார்கள்!' என்று அடித்துப் பேசி அமர்ந்தார் பெரியார். அடுத்துப் பேசிய என்.எஸ்.கே.'பெரியார் சொன்னவை அனைத்தும் சரியே. நாங்கள் கொள்ளை அடிக்கிறோம். எங்களால் நன்மையைவிட கேடுகளே அதிகம்!' என்றார். அந்த நேர்மையும் துணிச்சலும் கலைவாணர் கைவண்ணம்!

16. சேலம் அருகே தாரமங்கலம் பஞ்சாயத்தில் நடைபெற்ற அண்ணாவின் படத் திறப்பு விழாதான் கலைவாணர் கலந்துகொண்ட கடைசி நிகழ்ச்சி. அதே போல் அண்ணா கலந்துகொண்ட கடைசி நிகழ்ச்சி, கலைவாணரின் சிலை திறப்பு விழா!

17. கலைவாணர் நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையில் இருந்த சமயம், அவர் இறந்துவிட்டதாக அடிக்கடி வதந்திகள் பரவின, 'மதுரம், நான் சாகலேன்னா இவங்க விட மாட்டாங்கபோல. இவங்க திருப்திக்காகவாவது ஒரு தரம் நான் அவசியம் சாகணும் போலிருக்கே என்றாராம்!

18. ஒரு கட்டத்தில் என்.எஸ்.கே-வின் உடல்நிலை மோசமானது. மருத்துவர்கள் கைவிரித்துவிட்டனர். மருந்து உண்பதை நிறுத்திவிட்டார். 1957-ம் ஆண்டு ஆகஸ்டு 30-ம் தேதி காலமானார். தமிழகத்தின் ஒவ்வொரு வீடும் துக்கத்தில் ஆழ்ந்தது என்று உண்மையை உரைக்கும் பத்திரிகைகள் எழுதின.!

No comments:

Post a Comment