Wednesday 14 December 2011

பாரத ரத்னா....:- இசையரசி...:- எம்.எஸ்.சுப்புலட்சுமி...:- ஒரு நினைவு கூறல்..


ஒரு சமயம் மதுரை சேதுபதி உயர்நிலைப்பள்ளி அரங்கில் சண்முகவடிவு அம்மாள் வீணைக் கச்சேரி செய்து கொண்டிருந்தார். வாசிப்பை திடீரென்று நிறுத்திவிட்டு, அருகிலிருந்த தனது மகள் 10 வயதுச் சிறுமி சுப்புலட்சுமியை அழைத்து, குஞ்சம்மாள், நீ வந்து பாடு என்று மேடைக்கு அழைத்தார்.
உடனே சிறுமி குஞ்சம்மாள் மேடைக்கு ஓடிச் சென்று, இந்துஸ்தானி மெட்டில் ஆனந்த ஜா என்ற மராட்டி ராகப் பாடலை, சிறிதும் சபைக் கூச்சமின்றி வியர்வை ததும்ப பாடினார். மக்களின் பலத்த கரகோஷத்தை பற்றி கேட்க்கவும் வேண்டுமா..!

"இந்தியா இந்த தலைமுறையில் ஓர் மாபெரும் கலைஞரை உருவாக்கியுள்ளது என்பதில் நீங்கள் பெருமிதம் கொள்ளலாம்" என புகழ் பெற்ற கர்நாடக சங்கீத மேதை திருமதி எம். எஸ். சுப்புலட்சுமியைப் பற்றி கவிக்குயில் சரோஜினி நாயுடு ஒருமுறை கூறினார்.!

இன்றைக்கும் அகில இந்திய வானொலியில் காந்தி அஞ்சலிக்கு முன்னால் ஒலிக்கும் வைஷ்ணவ ஜனதோ மற்றும் ரகுபதிராகவ ராஜாராம் போன்ற, தேச‌ப்பிதா மகாத்மா காந்திக்குப் பிடித்த பாடல்கள் திருமதி எம்.எஸ். அவர்களால் பாடப்பட்டவையே.!

தமிழகத்தில் பிறந்து இந்திய இசையுலகின் சகாப்தமாக விளங்கிய திருமதி எம்.எஸ். சுப்புலட்சுமி பற்றி ஒரு நோட்டில் சொல்லிவிட இயலாது. இருப்பினும் முன்பே தொடங்கிய பணியினை சிறிதளவு முடித்துக்கொள்ளத் தான் இந்தப் பகிர்வு.  

1. மதுரை சண்முக வடிவு அம்மாள்  ராமசாமிப்பிள்ளை தம்பதியினருக்கு 1916ம் ஆண்டு செப்டம்பர் 16ம் தேதி 2ம் குழந்தையாக பிறந்தவர் திருமதி எம்.எஸ். சுப்புலட்சுமி...மதுரை சண்முகவடிவு சுப்புலட்சுமி..ஆவார்.

2. தனது தங்கையின் கச்சேரிகளுக்கு பங்களித்த திருமதி எம்.எஸ். சுப்புலட்சுமியின் அண்ணன் பெயர் மதுரை சக்திவேல் பிள்ளை...மிருதங்கக் கலைஞர்...தங்கை பெயர் வடிவாம்பாள்.

3. 1935ம் ஆண்டு மிருதங்க ஜாம்பவான் என்று புகழப்பட்ட புதுக்கோட்டை தட்சிணாமூர்த்திப் பிள்ளை அவர்களின் மணிவிழாவில் நடைபெற்ற திருமதி எம்.எஸ்.ஸின் கச்சேரி மூலம் அவரது சங்கீதத் புலமையை வெளியுலகம் அறியச் செய்தது. பின்னர் அப்போதைய மைசூர் மகாராஜாவின் அரசவையில் திருக்கோகர்ணம் ரங்கநாயகி அம்மாள் மிருதங்கத்துடன் திருமதி எம்.எஸ். அவர்கள் கச்சேரி செய்தபிறகு தென்னிந்தியாவின் எல்லா நகரங்களிலும் பிரபலமானார் .

4. நடிகைகள் மட்டுமே நடித்து பாடிக்கொண்டும் இருந்த காலத்தில் பிரபல திரைப்பட இயக்குநர் கே. சுப்ரமணியம் திருமதி எம்.எஸ்.ஸை 1936ம் ஆண்டு தனது சேவாசதனம் படத்தில் கதாநாயகியாக நடிக்க வைத்தார். பாடல்கள் மூலம் வெற்றி பெற்ற அந்தப் படத்தில் நடிக்கும் போது துணை புரிந்த தியாகி திரு டி. சதாசிவம் அவர்களை 1940ம் ஆண்டு எளிமையாக திருமணம் செய்து கொண்டார்.

5. தொடர்ந்து "சகுந்தலை" திரைப்படத்திற்கு பிறகு தனது கணவருக்கும் அவரது நண்பர் அமரர் கல்கி அவர்களுக்கும் பத்திரிகை தொடங்க உதவி செய்வதற்காக 1941ம் ஆண்டு "சாவித்திரி" படத்தில் நாரதர் வேடத்தில் நடித்தார் திருமதி எம்.எஸ் அவர்கள்.

6. 1946ம் ஆண்டு திருமதி எம்.எஸ். அவர்களின் பாடல்களால் பெரும் புகழ் பெற்ற பக்த மீரா திரைப்படம் திரைக்கு வந்தது. "காற்றினிலே வரும் கீதம்", "கிரிதர கோபாலா", போன்ற புகழ் பெற்ற பாடல்கள் கொண்ட பக்த மீரா தமிழில் பெரும் வெற்றியடைந்த பின்னர் ஹிந்தியில் தயாரிக்கப்பட்டு நாடு முழுதும் வெற்றியடைந்த போது ஹிந்தி மீராவைப் பார்த்த ஆசிய ஜோதி பிரதமர் ஜவஹர்லால் நேரு "இசையின் ராணிக்கு முன்னால் நான் சாதாரண பிரதமர் தானே" எனப் பாராட்டியது சரித்திரம் கூறும் செய்திகள்.!

7. சிறு வயதில் அன்னையிடமும் திருமணத்திற்குப் பிறகு செம்மங்குடி சீனிவாச அய்யர்,கடையநல்லூர் வெங்கட்ராமன், டி.பசுபதி, நேதநூரி கிருஷ்ணமூர்த்தி, டி.என்.ராஜரத்தினம் பிள்ளை, சுப்ரீம் கோர்ட் நீதிபதி டி.எல்.வெங்கட்ராம அய்யர், பாபநாசம் சிவன், மைசூர் வாசு தேவாச்சார் ஆகிய மேதைகளிடம் பல்வேறு விதமான கர்நாடக இசையின் நுணுக்கங்களை திறம்பட பயின்றார் திருமதி எம்.எஸ். அவர்கள்.

8. மூதறிஞர் ராஜாஜி, தியாகி டி.கே. சிதம்பரநாத முதலியார்,வள்ளல் ராஜா சர் அண்ணாமலைச் செட்டியார், அமரர் கல்கி, வள்ளல் ஆர்.கே. சண்முகம் செட்டியார், பேறறிஞர் அண்ணா போன்றவர்களால் தொடங்கப்பட்ட தமிழிசை இயக்கத்திற்கு திருமதி எம்.எஸ். அவர்கள் பெரும்பங்காற்றினார் என்றால் அது மிகையாகாது.

9. மகாகவி, வள்ளலார், ராமலிங்க அடிகளார், பாபநாசம் சிவன் போன்ற எண்ணற்ற மேதைகள் மற்றும் ஞானிகளின் தமிழ்ப்பாடல்களை மேடைதோறும் பாடி ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்டவர் திருமதி எம்.எஸ். அவர்கள்.

10. தேசப்பிதா மகாத்மா காந்தி முதல் ஏவுகணை இளவல் டாக்டர் அப்துல் கலாம் வரை அனைத்து பாரத‌ தேசத் தலைவர்களும் திருமதி எம்.எஸ். அவர்களின் ரசிகர்கள் என்பது வரலாறு!

11. ஒருசமயம் சபர்மதி ஆசிரமத்தில் பாடும் போது திருமதி எம்.எஸ். பாடியதை கேட்ட தேசப்பிதா...அவரது அபூர்வ குரலால் ஈர்க்கப்பட்டு ‘தன்னை இழந்து பாடுகிறார்’ என்று மனம் விட்டுப் பாராட்டியது மட்டுமன்றி  சுதந்திரத்திற்கு பின்னர் அக்டோபர் 2ம் நாள் 1947ல் மஹாத்மாவின் பிறந்தநாளில் அவர் கேட்க விரும்பியது திருமதி எம்.எஸ். அவர்களின் பாடலை என்ற நிலையில் பாடலை ஒலிநாடாவில் பதிந்து மஹாத்மா காந்திக்கு அனுப்பிய போது கேட்டு மகிழ்ந்தார்.தேசப்பிதா மகாத்மா காந்தியின் பிரார்த்தனைகளில் கலந்து கொண்டு பலமுறை பஜனைப் பாடல்களை திருமதி எம்.எஸ். சுப்புலட்சுமி பாடியுள்ளார். இன்றைக்கும் அகில இந்திய வானொலியில் காந்தி அஞ்சலிக்கு முன்னால் ஒலிக்கும் 'வைஷ்ணவ ஜனதோ' மற்றும் 'ரகுபதி ராகவ ராஜாராம்' போன்ற மகாத்மா காந்திக்குப் பிடித்த பாடல்கள் எம்.எஸ் அவர்களால் பாடப்பட்டவையே.!

12. 1966ம் ஆண்டு அக்டோபர் 23ம் தேதி ஐ.நா. சபையில் திருமதி எம்.எஸ். சுப்புலட்சுமியின் இசை நிகழ்ச்சியில் தனது 72ம் வயதில் கலந்து கொண்டார். நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொணட இந்த புகழ் பெற்ற நிகழ்வில் உலக அமைதியை வலியுறுத்தி மூதறிஞர் ராஜாஜி எழுதிய 'மே தி வோர்ல்ட் பர்கிவ் அவர் சின்ஸ்'(இந்த உலகம் நமது பாவங்களை மன்னிக்கட்டும்) என்னும் ஆங்கிலப் பாடலை அங்கிலேய இசைமேதை ஹாண்டல் மேனுபல் இசையமைக்க திருமதி எம்.எஸ். அவர்கள் ஐ.நா. சபையில் பாடியபோது அரங்கு நிறைந்த கரகோஷம் என்பதை சொல்லவே வேண்டாம்.!

13. சென்னை தமிழ் இசைச் சங்கம், எம்.எஸ். சுப்புலட்சுமிக்கு 'இசைப் பேரறிஞர்' பட்டம் சூட்டி கெளரவித்தது. இவர் பாடி பிரபலமடைந்த தமிழ் பாடல்களுள் 'வானத்தின் மீது மயிலாடக் கண்டேன்', 'குறையொன்றுமில்லை. நீ இறங்காய் எனில் பகலேது' 'ஒளி படைத்த கண்ணினாய் வா வா வா', 'வாழிய செந்தமிழ்' ஆகியவை குறிப்பிடத்தக்கவை.

14. திருப்பதி திருமலையில் தினமும் கோவில் நடை திறக்கும் போது இறைவனை துயில் எழுப்ப பாடப்படும் "வெங்கடேச சுப்ரபாதம்" என்ற தெய்வீகப் பாடலை "ப்ரதிவாதி பயங்கரம் அனங்கராச்சாரியார்" என்னும் வைணவப் பெரியவரின் குரலில் தான் திருப்பதி கோயிலில் ஒலிபரப்பி வந்தனர். பின்னர் திருமதி எம்.எஸ். அவர்களின் பாடலை அங்கீகாரம் செய்த திருமலை தேவஸ்தானம், அவரது குரலில் ஒலிபரப்ப ஆரம்பித்தது மட்டுமன்றி அந்த ஒலிநாடா மூலம்  திருப்பதி தேவஸ்தானத்திற்கு லட்சக்கணக்கான வருமானம் கிடைத்துள்ளது என்றால் அது மிகையாகாது.

15. எம்.எஸ். சுப்புலட்சுமி பாடிய வேங்கடேச சுப்ரபாதம், பஜகோவிந்தம் என்னும் ஆதிசங்கரரின் ஸ்லோகம், ரங்கபுர விஹாரா என்னும் முத்துசாமி தீட்சதரின் கீர்த்தனை ஆகியவற்றை எச்.எம்.வி. நிறுவனம் இசைத்தட்டாக வெளியிட்டப் போது அது உலக அளவில் பெரும் வெற்றியைத் தேடித் தந்தது.இது போன்ற கீர்த்தனைகளை பாடும்போது சமஸ்கிருத வித்வான்களிடம் முதலில் பாடிக் காண்பித்து உச்சரிப்பைத் தெளிவுபடுத்திக்கொண்ட பிறகே இசையமைப்பில் பாடியிருக்கிறார் திருமதி எம்.எஸ். அவர்கள் என்பது வியப்பூட்டும் செய்தி.!

16. எத்தனையோ இசைக்கலைஞர்கள் இம்மண்ணில் வாழ்ந்துள்ளனர். இப்போதும் பல மாமேதைகள் வாழ்ந்துக் கொண்டுதான் இருக்கின்றார்கள்.ஆனால் திருமதி எம்.எஸ். அவர்களுக்கென்று சில தனிச் சிறப்புகள் உண்டு.

17. திருமதி எம்.எஸ். அவர்களின் பல நூற்றுக்கணக்கான கச்சேரிகளின் மூலம் தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடையாக கிடைத்த பணத்தின் மதிப்பு அந்நாளிலேயே பல கோடி ரூபாய்க்கும் மேல் இருக்கும் என்பது செய்திகள். பாடகர்கள் பொதுவாக ராகம், தானம், பல்லவி என்று பாடுவார்கள். ஆனால் திருமதி எம்.எஸ். அவர்கள் தான் பாடிய "ராகத்தின்" மூலம் ஈட்டிய பெருஞ் செல்வம் அனைத்தையும், நற்பணிகளுக்காக "தானமாக" கொடுத்த உன்னத உள்ளம் படைத்த ஒரே இசை அரசி.!

18. அவரது உலகளாவிய பிரபலம்,புகழ்,பணம் எதுவும் அந்த மேதையை மாற்றிவிடவில்லை. ஒரு சமயம் மேடையிலேயே வெளிப்படையாக தன்னைப்பற்றி திருமதி எம்.எஸ். அவர்கள் சொன்னார்..“எனக்கு எதுவும் தெரியாது என்பது எனக்குத் தெரியும்.” நிறைகுடம் ததும்பாது என்ற முதுமொழிக்கேற்று வாழ்ந்த மாதரசி திருமதி எம்.எஸ். என்பதில் இரு வேறு கருத்துக்கள் இருக்க முடியுமா.! காரணம் என்ன என்பதை பார்ப்போம். அவரை விருதுகளில் அரசி என்பார்கள்.

1940 இசை வாணி.!
1954  பத்ம பூஷண்.!
1956  காளிதாஸ் சம்மன்.!
1967  ரவீந்திர பாரதி கலைரக் கழகத்தின் டாக்டர் பட்டம்.!
1968  சங்கீத கலா சாகா.!
1968  சென்னை மியூசிக் அகாடமியின் சங்கீத கலாநிதி.!
1970  தமிழ் இசைச் சங்கத்தின் இசைப் பேரறிஞர் விருது.!
1974  ரமன் மகசேசே விருது.!
1975  திருமலை திருப்பதி தேவஸ்தான ஆஸ்தான வித்வான்.!
1975  பத்ம விபூஷண்.!
1980  தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் தனிப்பெரும் கலஞர்.!
1981  சர்வதேச இசை கவுன்சில் ஆராய்ச்சிப் பேராசிரியர் மற்றும் உறுப்பினர்.!
1988  ஹபிஸ் அலிகான் நினைவு விருது.!
1990  இந்திராகாந்தி தேசிய ஒருமைப்பாட்டு விருது.!
1996  கலாரத்னா.!

19. 1998ம் ஆண்டு இந்தியாவின் மிக உயர்ந்த சிவிலியன் விருதான "பாரத ரத்னா" திருமதி எம்.எஸ். அவர்களுக்கு வாழும் காலத்திலேயே வழங்கப்பட்டது என்ற பெருமை மட்டுமன்றி...இசைக்காக பாரத ரத்னா விருதினை பெரும் முதல் நபர் என்ற பெருமையினையும் எம்.எஸ். அவர்களுக்கே உரித்தானது.!

20. இது தவிர திருமதி எம்.எஸ். அவர்களுக்கு 7 டாக்டர் பட்டங்கள் உட்பட 200க்கும் மேற்பட்ட விருதுகளும், பட்டங்களும் பல்வேறு அமைப்புகளால் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

21. பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தரணி ஆளவார்கள் என்று சொல்வார்கள். பரணியில் பிறந்த இசையரசி எம்.எஸ்.சுப்புலட்சுமி இசை உலகம் என்கிற தரணியை ஆண்டுவிட்டார்.1997-ல் அவரது கணவரின் இறப்புக்குப் பிறகு பொதுநிகழ்ச்சிகளில் திருமதி எம்.எஸ் கலந்துகொள்ளவில்லை.

22. நான்மாட கூடலிலே தோன்றி எட்டுத்திக்கும் தமிழோசை பரவச் செய்த இசை இமயம் 2004ம் ஆண்டு டிசம்பர் மாதம் 11ம் தேதி நள்ளிரவில் த்னது 88ம் அகவையில் இவ்வுலகை விட்டு நீங்கிவிட்டது.

திருமதி எம்.எஸ் மறைவின் போது அவர் பற்றி...அவருடன் பணியாற்றிய 2 பிரபலங்களின் கருத்து:

இசைமேதை டி.கே. பட்டம்மாள்:

''ஒரே துறையில் இருந்தாலும் எங்களுக்கிடையே எப்போதும் போட்டியோ பொறாமையோ கிடையாது. சகுந்தலா, மீரா, ஆகிய இரண்டு படங்களில் அவர் நடித்திருக்கிறார். அவரது இழப்பு சங்கீத உலகுக்கு பேரிழப்பு என்றால், தனிப்பட்ட முறையில் நான் எனது பிரியமான தோழியை இழந்துவிட்டேன்.. பட்டு என்று அழைக்கும் தோழியை இழந்துவிட்டேன்..''

வி.வி. சுப்பிரமணியம் (வயலின் கலைஞர்)

பதினோரு ஆண்டுகள் அவரது குழுவில் இடம்பெறும் பாக்கியம் எனக்கு கிடைத்தது. அவரிடமிருந்து நான் கற்றுக் கொள்ள வேண்டும் அல்லது பின்பற்ற வேண்டும் என்று நினைத்தால் அது அவரது தயாள‌ குணத்தைத்தான்.

திருமதி எம்.எஸ். அவர்களை காலம் நம்மிடமிருந்து பறித்துக் கொண்டுவிட்டது. ஆனால் அவரது அமுதக்குரல் இன்றும் என்றும் நம்மிடையே ஒலித்துக் கொண்டிருக்கும். அது காலத்தால் அழிக்க முடியாத அமரக் குரல்.

No comments:

Post a Comment