Sunday 4 December 2011

சுதந்திரக் காற்று


லால லஜபதி ராய்...பஞ்சாப் சிங்கம்:

1928 ம் ஆண்டு சைமன் கமிஷனை எதிர்த்து காங்கிரஸ் போராட்டம் அறிவித்தது.  ''சைமனே திரும்பிப் போ'' என்ற முழக்கம் நாடு முழுவதும் பிரபலமானது. அக். 30 ம் தேதியன்று சைமன் கமிஷனைக் கண்டித்து நடந்த லாகூரில் ஆர்ப்பாட்டத்தில் பஞ்சாப்  சிங்கம் லாலா லஜபதிராய் கலந்துகொண்டார். ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது காவல் துறையினர் தடியடி நடத்தினர். இதில் இந்திய விடுதலைப் போராட்டத்தின் மூத்த தலைவர்களில் ஒருவரான லாலா லஜபதிராய் படுகாயமுற்று மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். 

ஆனால், சிகிச்சை பலனளிக்காமல் 1928 , நவ.17 ம் தேதி மரணமடைந்தார். இச்சம்பவம் நாட்டில் பெரும் கொந்தளிப்பை உருவக்கியது.  
லாலா லஜபதிராய் மீது தடியடி நடத்திய வெள்ளைய காவல் அதிகாரியான சாண்டர்ஸ் என்பவனை,  லஜபதிராய் இறந்து சரியாக ஒரு மாதம் கழித்து,  டிச. 17 ம் தேதியன்று பகத்சிங்கும், ராஜகுருவும் சுட்டுக் கொன்றனர்.

1865 , ஜன. 28ல் பஞ்சாபின் மோகா மாவட்டத்தில் துடிகே என்ற கிராமத்தில் பிறந்தவர் லாலா லஜபதி ராய். சட்டம் பயின்ற லாலா நாட்டு விடுதலைக்காக தனது வாழ்வையே அர்ப்பணித்தார்.  லாஹூரில் (தற்போதைய பாகிஸ்தானில் உள்ளது) இருந்தபடி  தனது எழுத்தாலும் பேச்சாலும் ஆழ்கில ஆட்சிக்கு எதிராக மக்களை அணிதிரட்டியவர்  லாலா லஜபதி ராய். நாட்டில் சுதேசி இயக்கத்தை  வீறுகொண்டு எழச் செய்தவரும் இவரே.

இந்திய விடுதலைப் போரில் காந்திஜி வருகைக்கு முன் போராட்டத்தை தலைமை தாங்கி நடத்திய லால்- பால்- பால் என்ற திரிசூலத் தலைவர்களில் முதன்மையானவர் லாலா லஜபதி ராய். பஞ்சாப் சிங்கம் என்று அழைக்கப்பட்ட இவர், தமிழகத்தின் மஹாகவி பாரதிக்கு ஆதர்ஷ புருஷர். இவர் பேரில் மாஹாகவி பல கவிதைகள் எழுதியுள்ளார்.!

வ.உ. சிதம்பரம் பிள்ளை :

விடுதலைக்கு வித்திட்ட வீரர்களுள் இன்னொருவர் நமது தமிழ்நாட்டைச் சேர்ந்த..."கப்பலோட்டிய தமிழன்", "செக்கிழுத்த செம்மல்" என்றெல்லாம் சரித்திரத்தில் மக்களால் அன்புடன் அழைக்கப்படும் வ. உ. சிதம்பரம் பிள்ளை அவர்கள். நெல்லை மாவட்டத்தில் பிறந்து நாட்டு விடுதலைக்காகப் பாடுபட்டு நலிவுற்றவர். செக்கிழுத்த செம்மல். நாட்டு முன்னேற்றத்திற்காக மட்டுமின்றி, இலக்கிய இலக்கண வளர்ச்சிக்காகவும் அரும்பாடுபட்டவர். சிறந்த பதிப்பாசிரியர் திருக்குறள்...மணக்குடவருரை, தொல்காப்பியம்...இளம் பூரணர் உரை...மட்டுமன்றி...மேலைநாட்டுத் தத்துவப் பேரறிஞராய் விளங்கிய ஜேம்ஸ் ஆலென் எழுதிய நூல்களுக்குத் தமிழாக்கம் செய்தவர்.

தமிழ் நாட்டில் உள்ள திருநெல்வேலி மாவட்டத்தில் ஒட்டப்பிடாரம் எனும் ஊரில் உலகநாதன் பிள்ளை - பார்வதி அம்மை என்பவர்களுக்கு மூத்த மகனாக இவர் பிறந்தார். அடிப்படைக் கல்வியை ஓட்டப்பிடாரத்திலும், உயர்நிலைக் கல்வியை தூத்துக்குடியிலும், சட்டக்கல்வியைத் திருச்சியிலும் பெற்று 1895-ல் வழக்கறிஞரானார்.

உரிமையியல், குற்றவியல் ஆகிய இரண்டு சட்டத் துறைகளிலுமே சிறந்து விளங்கிப் பொருள் குவித்தார்.தமிழாராய்ச்சி, தத்துவ ஆராய்ச்சி ஆகியவற்றிலும் ஆர்வம் கொண்டிருந்தார். விவேகபானு என்கிற மாத இதழை நடத்தி வந்தார். சைவ சித்தாந்த சபை, மதுரைத் தமிழ்ச் சங்கம், வாலிபர் சங்கம், பிரம்ம சங்கம் போன்ற சங்கங்களில் உறுப்பினராகித் தன் அறிவுப் பசிக்குத் திசைதோறும் உணவு தேடினார்.

சென்னையில் விவேகானந்தர் மடத்தைச் சேர்ந்த இராமகிருஷ்ணானந்தரின் சந்திப்பு வ.உ.சி. அவர்களின் உள்ளத்தில் விடுதலைக் கனலை ஓங்கச் செய்தது. அதன்பிறகே அவர் வாழ்வில் புது அத்தியாயம் தொடங்கியது. தூத்துக்குடி திரும்பியதும், கைத்தொழில்சங்கம், தருமசங்கம், நூல்நூற்பு நிறுவனம், தேசியப் பண்டகசாலை ஆகியவற்றை நிறுவி சுதேசியம் வளர்க்க ஆரம்பித்தார். வந்தே மாதர முழக்கங்களைத் துணிகளில் எழுதச் செய்து வீதிகள் தோறும் வீடுகள் தோறும் தேசிய உணர்வை வளர்த்தார். பாலகங்காதர திலகரின் விடுதலைப் போராட்டத்தில் மனதை பறிகொடுத்து, இந்திய சுதந்திரப் போராட்டத்தி்ற்காகப் பாடுபட்டார்.

கப்பலோட்டிய தமிழன்:

ஆங்கிலேய ஆதிக்கம் கடல்வழி வணிகத்தினால் தான் வளர்ந்தது என்கிற அடிப்படையில், அவர்களை விரட்ட, அவர்களுடைய கப்பல் கம்பெனிக்குப் போட்டியாக, 1906-ஆம் ஆண்டு "சுதேசி நாவாய்ச் சங்கம்" என்கிற சங்கத்தை நிறுவி அதன் செயலாளர் ஆனார். (அதன் தலைவர் மதுரை தமிழ்ச்சங்கத் தலைவர், வள்ளல் பாண்டித்துரைதேவர்; சட்ட ஆலோசகர் சேலம் சி.விஜயராகவாச்சாரியார்). அந்தக் கம்பெனியின் சார்பில் காலியா, லாவோ ஆகிய இரண்டு கப்பல்களை வாங்கி தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து இயக்கத் தொடங்கினார். அதனால் கப்பலோட்டிய தமிழன் என்று அனைவராலும் அன்புடன் அழைக்கப்பட்டார்.

செக்கிழுத்த செம்மல்:

தொடர்ந்த இவருடைய சுதந்தரப் போராட்ட நடவடிக்கைகளால் கடும் கோபமடைந்த ஆங்கிலேய அரசு, 1908-ஆம் ஆண்டு மார்ச் 9-ஆம் நாள் விபின் சந்திரபாலர் விடுதலைக் கொண்டாட்டத்தின் போது அரசாங்கத்தை அவமதித்ததாகவும், சுதந்திரத்திற்காக பொதுமக்களைத் தூண்டியதாகவும் இவர்மேல் வழக்குப் பதிவு செய்து, இவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை கொடுத்தது. (அரச நிந்தனைக்கு 20 ஆண்டுகள், சுப்ரமணிய சிவாவுக்கு உடந்தையாக இருந்ததற்கு 20 ஆண்டுகள். மொத்தம் 40 ஆண்டுகள். அதுவும் அந்தமான் சிறையில்). தீர்ப்பளித்தவர் திருநெல்வேலி ஜில்லா செஷன்ஸ் நீதிபதி ஏ.எஃப்.ஃபின்ஹே. அந்தத் தீர்ப்பினை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. முறையீட்டின் போது அந்தமான் அனுப்ப இயலாது என்பதால் கோவைச் சிறையில் அடைக்கப்பட்டார் வ.உ.சி. அங்கே தான் கொடுமையிலும் கொடுமையாக செக்கிழுத்து நலிந்தார். சென்னை உயர் நீதிமன்றம் அவருடைய தண்டனைக் காலத்தைப் பத்தாண்டுகளாகவும், லண்டன் பிரிவியூ கவுன்ஸில், ஆறு ஆண்டுகள் கடுங்காவலாகவும் குறைத்தன.

விடுதலைக்குப் பின்...கருத்து வேறுபாடு காரணமாக காங்கிரசிலிருந்து விலகிய வ.உ.சி. 1936 நவம்பர் 18ஆம் தேதி இரவு 11-30 மணியளவில் தனது இல்லத்தில் காலமானார். அவர் இறக்கும் தருவாயில் மகாகவியின் "என்று தணியும் இந்த சுதந்திர தாகம்" எனும் பாடலைப் பாடச்சொல்லிக் கேட்டுக் கொண்டே உயிர் பிரிந்தது. வாழ்க கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி.யின் புகழ்!

ஓட்டப்பிடாரம் ஊரில் பிறந்து - ஆங்கில 
கோட்டை சுவற்றின் குடியை உடைத்தவன்... 

உலகநாதன் பிள்ளை , பார்வதி அம்மை - பெற்று 
சீராட்டி வளர்த்த செல்வப்புதல்வன் .... 

சட்டத்துறையில் பட்டம் பெற்றவன் - பல 
சங்க இலக்கியம் அறிவாய் கற்றவன் ... 

வ.உ. சிதம்பரம் பிள்ளை இயற்ப்பெயர் - மக்கள் 
வழங்கிய பெயர்தாம் எத்தனை எத்தனை.!

செக்கிழுத்த செம்மலும் இவனே - முதல் 
கப்பலோட்டிய தமிழனும் இவனே ! 

திலகரின் போராட்ட தீரம் கண்டு - நீ 
விடுதலைப் போரில் வேட்கை கொண்டாய்.! 

வந்தே மாதர முழக்கத் துணிகள் - வீடு 
வீதிகள் தோறும் தொங்கிட செய்தாய்...!

சுதேசி நாவாய் சங்கம் கண்டாய் - என்றும் 
சுதந்திரக் கனவை நெஞ்சில் கொண்டாய்.!

இரட்டை ஆயுள் தண்டனை தந்த - அந்த 
நீதிபதி ஃபின்ஹே வாயால் உன்னை புகழ்ந்தார்.!

திருக்குறள் மணக்குடவர் உரை பதித்தாய் - அன்று 
சாந்திக்கு மார்க்கம் என்ற தத்துவநூல் பொதிந்தாய். 

ஒருநாடு உரிமை பெற்று விளங்கிட - இரு 
காரணம் கண்டு கருத்தாய் வாழ்ந்தாய்.!

பொருளாதார சுரண்டலை ஒழித்து வாழ்ந்திடு -ஒன்று 
தாய் மொழியின் வாயிலாய் கற்றிடு ரெண்டு.!

தூத்துக்குடியில் இன்று துறைமுகமாம் - அதற்க்கு 
உந்தன் பெயர்தான் அறிமுகமாம்.!

உன் விடுதலை வெள்ளம் கண்டது பாடநூல் - என்றும் 
காலம் பல தாண்டியும் வாழுமே உன் புகழ்.!

நாம் இன்று சுவாசிக்கும் சுதந்திரக் காற்று கத்தியின்றி...ரத்தமின்றி... சத்தமின்றி வந்ததில்லை. இது போன்ற பல சுதந்திரப் போராட்டத் வீரர்களின் தியாகத்தின் மூலம் தான் கிடைத்தது என்பதை நாம் அறிவோம்.!

No comments:

Post a Comment