Wednesday 14 December 2011

இந்திய டென்னிஸ் விளையாட்டின் ஜாம்பவான் பத்ம ஸ்ரீ விஜய் அமிர்தராஜ்


                                                 1970 முதல் 1993 வரை உலக அளவில் டென்னிஸ் போட்டிகளில் சுமார் 23 ஆண்டுகள் கலந்துகொண்டு  டேவிஸ் கோப்பை இந்திய குழுவுக்கு 1974 மற்றும்  1987ம் ஆண்டுகளில் தலைமை ஏற்று இறுதிப் போட்டிவரை முன்னேறியவர்.  1973 மற்றும் 1981ம் ஆண்டுகளில் புகழ் பெற்ற‌ கிராண்ட் ஸ்லாம் போட்டியான‌ விம்பிள்டனில் இந்தியாவின் சார்பாக காலிறுதி வரை சென்றவர். உலகின் 16வது சிறந்த ஆட்டக்காரராக(சிக்ஸ்ட்டீந்த் சீடட் பிளேயர்) ஜான் போர்க், ஜிம்மி கானர்ஸ், மற்றும் இவான் லெண்டில் போன்ற முன்னணி வீரர்களை வீழ்த்தி டென்னிஸ் உலகில் இந்தியாவின் பெருமையை உலக அரங்கில் உயர்த்தி பெருமை தேடித் தந்தவர் தான் திரு விஜய் அமிர்தராஜ் அவர்கள்.

சென்னையில் 1953ம் ஆண்டு டிசம்பர் 14ம் தேதி திரு ராபர்ட் அமிர்தராஜ் மற்றும் திருமதி மாகி அமிர்தராஜ் தம்பதியருக்கு மகனாக பிற‌ந்த இவரது பூர்வீகம் நெல்லை மாவட்டத்திலுள்ள காவல்கிணறு என்ற சிற்றூராகும். திரு விஜய் அமிர்தராஜ் அவர்களின் பெற்றோர் இருவரும் டென்னிஸ் வீரர்கள் என்பதால் சிறுவயது முதலே விளையாட பழகினார். ஆயினும் சிஸ்டிக் பைப்ரோசிஸ் என்ற நுரையீரலை பாதிக்கும் மூச்சிறைப்பு நோயினால் 10 வயது வரை பாதிக்கப்பட்ட திரு விஜய் அமிர்தராஜ் டென்னிஸ் விளையாட்டில் தனது கடும் பயிற்சி மற்றும் அசாத்திய மன உறுதி மூலம் தனது பிரச்சினையிலிருந்து விடுபட்டார் என்பது செய்திகள். இனி திரு விஜய் அமிர்தராஜ் அவர்கள் பற்றிய சில குறிப்புகளை காண்போம்.

1. பள்ளிக் கல்வியை எழும்பூரில் உள்ள டான் போஸ்கோ பள்ளியிலும், கல்லூரி படிப்பை லயோலா கல்லூரியிலும் பயின்றார்.

2. சிறுவயது முதலே டென்னிஸ் விளையாட்டில் சிற‌ந்து விளங்கிய திரு விஜய் அமிர்தராஜ் 1970-ம் ஆண்டு முதல் சர்வதேச டென்னிஸ் போட்டிகளில் விளையாடத் தொடங்கினார். 

3. 1973-ம் ஆண்டு விம்பிள்டன் மற்றும் அமெரிக்க ஓபன் கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறியதன் மூலம் சர்வதேச போட்டிகளில் தனது முத்திரையைப் பதிக்கத் தொடங்கினார்.! 

4. தொடர்ந்து பல்வேறு சர்வதேசப் போட்டிகளில் விளையாடிய அமிர்தராஜ் 16 ஒற்றையர் பட்டங்களை வென்று சாதனை படைத்துள்ளார்.!

5. ஒற்றையர் பிரிவில் மட்டுமல்லாது, இரட்டையர் பிரிவிலும் 13 பட்டங்களை அவர் வென்றுள்ளார். 

6. கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் பட்டம் வெல்லும் முனைப்புடன் தீவிர பயிற்சி மேற்கொண்ட திரு விஜய் அமிர்தராஜ் 1981-ஆம் ஆண்டு நடந்த விம்பிள்டன் போட்டியில் காலிறுதிச் சுற்று வரை முன்னேறினார்.!

7. இந்திய டேவிஸ் கோப்பை போட்டிக் குழுவுக்கு தலைமை ஏற்று 1974 மற்றும் 1987-ம் ஆண்டுகளில் இந்தியக் குழு இறுதிப்போட்டிக்கு முன்னேறுவதற்கு உறுதுணையாக இருந்தார் திரு விஜய் அமிர்தராஜ்.

8. தனது சிறப்பான ஆட்டத்தின் மூலம் 1980-ம் ஆண்டு உலக டென்னிஸ் தரவரிசையில் 16 இடத்துக்கு முன்னேறினார் அமிர்தராஜ். 

9. சர்வதேச போட்டிகளில் இந்தியாவை பெருமையடையச் செய்த திரு விஜய் அமிர்தராஜ் அவர்களுக்கு 1983ம் ஆண்டு பத்ம ஸ்ரீ விருது வழங்கி இந்திய அரசு அவரை பெருமைப் படுத்தியது.

10. தொடர்ந்து பல்வேறு இந்திய மற்றும் சர்வதேச போட்டிகளில் விளையாடி வந்த திரு விஜய் அமிர்தராஜ் 1993-ம் ஆண்டு டென்னிஸிலிருந்து ஓய்வு பெற்றார்.

பன்முகத் திறமைகள்:

தனது டென்னிஸ் விளையாட்டில் மட்டுமன்றி ஆங்கிலத் திரைப்படங்களிலும் பங்களித்துள்ள திரு விஜய் அமிர்தராஜ் ஆக்டோபஸி, ஸ்டார் ட்ரெக் 4 போன்ற படங்களில் நடித்தது மட்டுமன்றி பல தமிழ் மற்றும் ஆங்கிலப் படங்களை தயாரித்து உள்ளார். ( அனேகமாக சினிமா உலகில் அனுபவம் உள்ள‌ நண்பர்கள் பின்னூட்டத்தில் உதவலாம்)

குடும்ப வாழ்க்கை:

இலங்கையைச் சேர்ந்த இந்திய வம்சாவளி வணிகர் வென்செஸ்லாஸின் மகள் சியாமளாவை திருமணம் செய்து கொண்ட திரு விஜய் அமிர்தராஜ் தம்பதிகளுக்கு பிரகாஷ், விக்ரம் என்று இரு மகன்கள் உண்டு. திரு பிரகாஷ் அமிர்தராஜ் இப்போது இந்தியாவிற்காக டென்னிஸ் விளையாடி வருகிறார். அமெரிக்காவிலுள்ள கலிபோர்னியா() மாகாணத்தில் லாஸ் ஏஞ்சலஸ்() நகரத்தில் வசிக்கும் திரு விஜய் அமிர்தராஜ் டி.வியில் விளையாட்டு விமர்சகராகவும், நிகழ்ச்சிகளை தயாரிக்கும் தொழிலதிபராகவும் இருந்து வருகிறார். 

டென்னிஸ் வீரர்களான திரு ஆனந்த் மற்றும் அசோக் அமிர்தராஜ் ஆகிய  இவரது 2 சகோதரர்களும் 1976 ல் விம்பிள்டன் ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சார்பாக விளையாடி அரையிறுதி வரை முன்னேறினர் என்பது குறிப்பிடத் தக்கது.

அமைதி நடவடிக்கைகளுக்கான ஐ.நா. தூதராகவும் பணியாற்றிய திரு விஜய் அமிர்தராஜ், தூதர் பதவியிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர் தொடங்கிய விஜய் அமிர்தராஜ் அறக்கட்டளை ஏழை, எளிய மக்களுக்கு தக்க உதவிகள் புரிவது மட்டுமன்றி, பேரிடர் காலங்களில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ளுதல் போன்றவற்றில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத் தக்க வியப்பூட்டும் செய்திகள்.

டென்னிஸ் உலகின் ஜாம்பவான் திரு விஜய் அமிர்தராஜ் அவர்களுக்கு இன்று
58ம் பிறந்தநாள். இந்தியாவின் பெருமையை டென்னிஸ் விளையாட்டில் உலக அரங்கில் உயர்த்திய திரு விஜய் அமிர்தராஜ் அவர்களுக்கு நமது பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

No comments:

Post a Comment